நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் குற்றவாளி என தீர்ப்பு

0 5777
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் குற்றவாளி என தீர்ப்பு

தலைமை நீதிபதிகள், முன்னாள் தலைமை நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் ஜூன் 27 ஆம் தேதி டுவிட்டரில், வரலாற்று ஆய்வாளர்கள் கடந்த ஆறாண்டுகளைத் திரும்பிப் பார்த்தால் நெருக்கடி நிலை அறிவிக்காமலேயே நாட்டின் ஜனநாயகம் எப்படிச் சீர்குலைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவர் என்றும், அதில் உச்சநீதிமன்றத்துக்கும், கடந்த நான்கு தலைமை நீதிபதிகளுக்கும் உள்ள பங்கையும் குறிப்பிடுவர் என்றும் தெரிவித்தார்.

இதேபோல ஜூன் 29ஆம் தேதி டுவிட்டரில், கொரோனா காலகட்டத்தில் நீதி பெறுவதற்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் வகையில், உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டுத் தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்தே நாக்பூர் ஆளுநர் மாளிகையில், பாஜக தலைவர் ஒருவருக்குச் சொந்தமான 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தில் முகக்கவசமோ, தலைக்கவசமோ இல்லாமல் சென்றதாகக் குறிப்பிட்டார்.

இதைத் தானாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்த உச்சநீதிமன்றம், ஜூலை 22ஆம் தேதி பிரசாந்த் பூசணுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கின் விசாரணையின்போது, நீதிபதிகளின் பண்புகள், நடத்தைகள் பற்றியே தான் கருத்துத் தெரிவித்ததாகவும், அது நீதி வழங்கலுக்குத் தடையாக இல்லை எனும்போது எப்படி நீதிமன்ற  அவமதிப்பாகும் என்றும் பிரசாந்த் பூசண் வாதிட்டார்.

அவர் அளித்த உறுதிமொழிப் பத்திரத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் சரத் அரவிந்த் பாப்தே அமர்ந்திருந்ததைத் தான் அறியாமல் கருத்துக் கூறியதற்கு வருந்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில், பிரசாந்த் பூசண் குற்றவாளி என அறிவித்தனர். அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த வாதங்கள் ஆகஸ்டு இருபதாம் தேதி நடைபெறும் என அறிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments