ஓடியாங்க ஓடியாங்க பணம் வருது....! மோசடிக்காரர்களின் புதிய ரூட்
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் விவசாயி அல்லாதவரின் விவரங்களையும் மோசடியாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்து பணம் பெற்று மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பயிரிடக்கூடிய நிலங்கள் 5 ஏக்கருக்கும் குறைவாக தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் பிரதமர் கிசான் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
சிறு குறு விவசாயிகள் பட்டா, சிட்டா அடங்கல், ஆதார், வங்கி பாஸ் புக் நகல்களை வேளாண்மை துறையினரிடம் ஒப்படைத்து, பிரதான் மந்திரி கிசான் விகாஸ் திட்டத்தில் தங்களை பயனாளிகளாக தேர்வு செய்து கொள்ளும் முறை இருந்து வந்தது.
தற்போது இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அனுமதித்திருப்பதால், அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற்று வருவது அம்பலமாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை ஊழியர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக பெருமளவில் பணம் சம்பாதித்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெறும் ஆதார் அட்டை நகலையும் வங்கி கணக்குப் புத்தகம் நகலையும் அளித்தால் போதும் திட்டத்தில் பயனாளிகளாக எவர் வேண்டுமானாலும் சேர்ந்து விடலாம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். வேளாண்மை துறையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் மத்திய அரசு அளித்த ஐடிகளை தவறாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் மூலம் போலியாக பயனாளிகளை இதில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விண்ணப்பித்தவர்களின் வங்கி கணக்கிற்கு உடனடியாக தலா 4 ஆயிரம் ரூபாய் வந்துவிடுவதால் பொதுமக்களும் இதில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒரு விவசாய குடும்பத்தில் ஒருவர்தான் இந்த திட்டத்தில் பணம் பெற முடியும் என்றிருந்த நிலையில், ஒரே குடும்பத்தில் பலருக்கு தற்போது பணம் வந்து சேர்ந்துள்ளது.
நிலம் உள்ள மற்றும் நிலமற்றவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வங்கி கணக்கிற்கு திடீரென பணம் வந்துள்ளது. இந்த பணத்தை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏராளமான பொது மக்கள் வங்கி முன்பு காத்திருக்கின்றனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது, தங்களுக்கு புகார்கள் வந்திருப்பதாகவும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு அதனை கொண்டு சென்றிருப்பதாகவும் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கூறினார்.
இதே மோசடி கடலூர் மாவட்டத்திலும் நடந்திருப்பது தெரியவந்துள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையில் மோசடி நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய நடத்தி, அறிக்கை சமர்பிக்க வேளாந்துறை அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரசகாமுரி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் மத்திய பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் நடைபெற்ற மோசடி சம்பவம் குறித்து 13 மாவட்ட ஆட்சியர்களுடன் வேளாண் துறை முதன்மை செயலாளர் ககந்தீப் சிங் பேடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சேர்ந்தவர்களில் பயனாளி அல்லாதோரை கண்டறிந்து இன்னும் ஒரு வாரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், மாவட்டங்களில் போலி பயனாளிகளை சேர்த்த கணினி மையங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங்க் பேடி உத்தரவிட்டுள்ளார்.
Comments