சுதந்திரதின விழா ஏற்பாடு.. தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு..!
நாளைமறுநாள் சுதந்திரதினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
சுதந்திர தின விழாவை யொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார்.
சென்னையில் 3 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நகரின் பல்வேறு பகுதிகளில் வாகனசோதனை நடத்தப்படுவதோடு, விடுதிகளில் தங்கியிருப்போர் குறித்தும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விமானநிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாகன சோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களிலும் மோப்ப நாய்கள் மூலம் ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே போலீசாரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சுதந்திரதின விழா நடக்கும் நாளன்று சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும், நகரின் முக்கிய இடங்களில் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Comments