மூணாறு மலைச்சரிவில் உயிர் தப்பியவர்கள் சொன்னது என்ன…! 50 தமிழர்கள் புதையுண்ட பின்னணி
மூணாறு அடுத்த பெட்டிமுடி ராஜமலை தேயிலை எஸ்டேட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலசரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியான நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்தோர் உறவுகளோடு, உடமைகளையும் வாழ்விடத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மூணாறு அடுத்த ராஜாமலை எஸ்டேட்டில் பச்சை போர்வையை போர்த்தியது போல காட்சியளிக்கும் இந்த பெட்டிமுடி மலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியாகி உள்ளனர்.
இவர்கள் எல்லோரும் தமிழகத்தில் இருந்து சென்று தலைமுறை, தலைமுறையாக குடும்பத்துடன் அங்கு தங்கி இருந்து 300 ரூபாய் தினக்கூலிக்காக கடுமையான ஆபத்தை எதிர்கொண்டு பணி புரியும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள்.
அங்கு ஒருவாரமாக மீட்புப் பணிகள் நடந்துவரும் நிலையில் பினராயி விஜயன் பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூற அங்கு செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு அன்று இரவில் நடந்தது என்னவென்பதை அதில் இருந்து தப்பி பிழைத்தவர்கள் சற்று பதற்றத்துடன் விவரித்தனர்.
வீட்டிற்கு இருபக்கங்களில் இருந்தும் பாய்ந்து வந்த தண்ணீரில் சிக்கி தவித்ததாகவும், தன்னுடைய சகோதரனால் கழுத்தளவு தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார் கல்லூரி மாணவி ஒருவர்.
அந்த இருட்டில் என்ன நடக்கின்றது என்பதை ஊகிக்கும் முன்பே சொல்லொணாத் துயரம் நிகழ்ந்துவிட்டதையும், தன்னுடைய தோழிகள் பலர் உயிரிழந்துவிட்டதாகவும் வீடுகள் இருந்த இடமெல்லாம் பாறைகளாகிவிட்டதாகவும் தெரிவித்தார் சிறுமி ஒருவர்.
சிலர் தங்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவியதாகவும், அந்த இருட்டுக்குள் சென்று மீட்க இயலாத நிலையில் ஒரு நொடியில் எல்லாம் தரை மட்டமாகி இருந்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.
இரவில் பயங்கர சத்தம் கேட்டு, சுதாரிக்கும் முன்பே மண் தங்களை அடைத்துக் கொண்டதாகவும் ஜன்னலை உடைத்துத் தப்பியதாகவும், 6 மாத குழந்தை உள்பட தங்கள் சொந்தங்கள் 5 பேர் தங்களை விட்டு சென்றுவிட்டதாக கதறி அழுதனர், உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்த பெண்கள்.
இனிவரும் காலங்களில் இது போன்ற விபரீதம் நிகழாமல் இருக்க தக்க பாதுகாப்பு வசதியுடன் கூடிய தரமான குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகம் அமைத்து கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் அரசு இவர்களின் வாழ்வாதாரம் மேம்பட கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments