மின்கருவிகள் பராமரிப்பில் அலட்சியம் வேண்டாம்..!
சென்னையில் நான்கு வயதுச் சிறுவன் டேபிள் பேன் ஒயரைப் பிடித்து இழுத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் இருக்கும் வீட்டில் மின்கருவிகள், மின் இணைப்பு பராமரிப்பில் அலட்சியம் காட்டக் கூடாது என எச்சரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு...
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்து வருகிறார். செவ்வாய் இரவு இவரின் 4 வயது மகன் தருணேஷ்வரன் கழிவறைக்குச் சென்றுவிட்டு ஈரம் உலராத கையுடன் சுவிட்ச் போர்டில் இருந்த டேபிள் ஃபேனின் ஒயரில் கை வைத்து இழுத்துள்ளான். ஒட்டுப் போட்டிருந்த ஒயரில் சேதமடைந்த பகுதியில் கைபட்டதால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.
வீட்டுக்கு வெளியே இருந்த தந்தைக்கு இது உடனடியாகத் தெரியவில்லை. சிறிது நேரம் கழித்துச் சிறுவனைத் தேடிய தாய், உணர்வற்ற நிலையில் மகன் கிடந்ததைப் பார்த்து அலறியுள்ளார். இதையடுத்துத் தாயும் தந்தையும் சிறுவனைக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
இது தொடர்பாகச் சூளைமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். டேபிள் ஃபேனின் நைந்து போன ஒயரைச் சிறுவன் ஈரக் கையால் தொட்டு இழுத்ததால் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
எனவே வீட்டில் உள்ள மின்சாதனத்திற்கான ஒயர்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நைந்து போன, பிய்ந்து போன ஒயர்களை உடனடியாக மாற்றுவது அவசியம். மேலும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்களுக்கு எட்டாத உயரத்தில் தான் சுவிட்ச் போர்டு போன்ற மின்சாதனப் பொருட்களுக்கான இணைப்புகள் அமைக்க வேண்டும். கட்டில், நாற்காலிகள் ஆகியவற்றின் மீது ஏறி நின்று சுவிட்சை ஆன் செய்யக் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது.
மின் கருவிகளுக்கான சுவிட்சைக் குழந்தைகள் தொடாமல் இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முன்னெச்சரிக்கையாக இருந்தால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்...
Comments