இந்தியாவுக்கு வருமா ரஷ்ய தடுப்பூசி..?
உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக ரஷ்யா கூறினாலும், அது இந்தியாவில் உடனடியாக கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ரஷ்ய தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படாமல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்திய சட்டங்களின் படி இறுதி கட்ட சோதனை நடத்தப்பட்ட பின்னரே அது பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே, இந்தியா, ரஷ்யாவின் தடுப்பூசியை வாங்க விரும்பினால், இந்தியர்களிடம் 3 ஆம் கட்ட சோதனையை நடத்துமாறு ரஷ்யாவிடம் கேட்டுக்கொள்ளும் நிலை ஏற்படும்.
இதே பாணியில் தான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி இந்தியாவில் இறுதிகட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இறுதிக்கட்ட சோதனை ஆயிரக்கணக்கானோரிடம் நடத்தப்படும் என்பதால், அவசர தேவை கருதி ரஷ்ய தடுப்பூசிக்கு தலைமை மருந்து கட்டுபாட்டாளர் அனுமதி அளிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
அதைப் போன்று, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்தியா, கொரோனா தடுப்பூசி வேறு எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் உற்பத்தி உள்நாட்டில் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பெரிய அளவிலான கொரோனா தடுப்பூசி உற்பத்திக்காக வேறு நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் போட்டுள்ளது. அது போன்ற ஒப்பந்தம் ஏதும் ரஷ்யாவுடன் போடப்படவில்லை என்பதால், ரஷ்யாவின் தடுப்பூசி இந்தியாவுக்கு வர நீண்ட காலம் பிடிக்கும் என கூறப்படுகிறது.
Comments