போக்கிரி பாணியில்.. லாக்டவுன் விஜய்..! பசுமை இந்தியா சவால்
தெலுங்கில் வெளியான ஒக்கடு, போக்கிரி வெற்றி திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு தனது நடிப்பில் கொடுத்த நடிகர் விஜய், மகேஷ் பாபுவின் சவாலை ஏற்று தமிழகத்தில் பசுமை இந்தியா முயற்சிக்காக மரக்கன்று நட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கால் தமிழ்த் திரை உலகமே முடங்கிக் கிடக்கும் நிலையில் தெலுங்கு திரையுலக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பசுமை இந்தியா சவால் என்ற பெயரில் மரம் நடும் சிறப்பான பணியை முன்னெடுத்து வருகின்றனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த சந்தோஷ் என்ற எம்.பி ஒருவர் தொடங்கி வைத்த இந்த பசுமை இந்தியா சவாலில், பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சிரஞ்சீவி, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் மரங்களை நட்டு சவாலை நிறைவேற்றியுள்ளனர். நாகர்ஜூனாவும், மருமகள் சமந்தாவும் சேர்ந்து ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்தனர்
மரம் இல்லாத தனது வீட்டில் முதல் முறையாக மரம் நட்டு வைத்து சவாலை நிறைவேற்றினார் ஜூனியர் என்.டி.ஆர்
சிரஞ்சீவியுடன் கைகோர்த்து தெலுங்கு திரை உலகில் ஜொலித்த நம்ம ஊரு விஜய் சேதுபதியும் தன் பங்கிற்கு வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து சவால் விட்டவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்
இந்த வரிசையில் தெலுங்கு திரை உலகில் முன்னனி நாயகனான மகேஷ்பாபு தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்ததோடு, தன்னை போலவே தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் விஜய்யும் மரம் நடுவாரா ? என்று டுவிட்டரில் சவால் விட்டிருந்தார்.
இந்த சவாலை ஏற்றுக் கொண்ட நடிகர் விஜய், எப்படி மகேஸ் பாபுவின் ஒக்கடுவை கில்லியாகவும் போக்கிரியை போக்கிரியாகவும் தனது ரசிகர்களுக்கு வெற்றிப்படமாக கொடுத்தாரோ, அதே பாணியில் தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்து தனக்கு விடப்பட்ட சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டினார்.
நடிகர் விஜய் மரக்கன்று நட்ட செயலை வரவேற்றுள்ள சமூக ஆர்வலர்கள், விஜய்யின் எண்ணத்தை, நிகழ்த்திக் காட்டுவதில் முன்னனியில் நிற்கும் அவரது ரசிகர்களும், தங்கள் மாஸ்டர் காட்டிய வழியில் ஊர் தோறும் ஆளுக்கொரு மரக்கன்றுகளை நட்டு வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் தமிழகத்திலும் இதே போன்று அனைத்து துறை பிரபலங்களும் சேர்ந்து ஆளுக்கொரு மரத்தை நட்டு வைத்து பசுமை இந்தியா முயற்சியை முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு...!
Comments