வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, அதனைத் தட்டிக்கேட்ட மூதாட்டியையும் தாக்கியதாக போக்குவரத்து தலைமை காவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பூர் ரமணா நகர் சுப்பரமணியன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன், வேப்பேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கும் பெண் ஒருவர் தனியாக இருந்தபோது, காவலர் கண்ணன் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்து பக்கத்து வீட்டில் சென்று தஞ்சம் புகுந்த அந்தப் பெண், கணவரிடமும் மாமியாரிடமும் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார்.
அவர்கள் காவலர் கண்ணனிடம் இதுகுறித்து கேட்கச் சென்றபோது, இருவரையும் அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து செம்பியம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கண்ணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கண்ணனை போலீசார் விசாரணைக்கு அழைத்தபோது, தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி அவர், மருத்துவமனையில் சென்று சேர்ந்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments