டிரம்பை நீதிமன்றத்துக்கு இழுக்கும் பைட்டான்ஸ் ... 45 நாள்களுக்கு பிறகு டிக்டாக்குடன் தொடர்பு வைத்தால் தண்டனை
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 45 நாள்களுக்கு பிறகு டிக் டாக் நிறுவனத்துடன் அமெரிக்கர்கள் யாராவது வர்த்தக தொடர்பு வைத்திருந்தால் அவர்களுக்கு 3 லட்சம் டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.
லடாக்கின் கால்வான் பகுதியில் சீன படைகளுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்தியாவில் சீனாவின் டிக் டாக் செயலிக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. கொரேனா பரவல் காரணமாக அமெரிக்காவும் சீனா மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்தியா டிக் டாக்குக்கு தடை விதித்ததை காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் டிக்டாக் செயலிக்கு அந்த நாட்டில் தடை விதித்தார்.
இதற்கான உத்தரவில் கடந்த ஆகஸ்ட் 6-ந் தேதி டிரம்ப் கையொப்பமிட்டார். இதனால், அடுத்த 45 நாள்களுக்கு பிறகு, அமெரிக்காவில் டிக் டாக் செயலி செயல் பட முடியாத நிலை உருவாகியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்கிற அசாதாரண சூழ்நிலையில் எந்த நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்க அதிபருக்கு பரந்த அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே டிக் டாக்குக்கு டொனால்ட் டிரம்ப் முடிவு கட்டினார்.
இந்த சூழலில் அமெரிக்க நிறுவனங்களுக்கே டிக் டாக் செயலியை விற்பனை செய்ய அதான் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முயன்று வருகிறது. மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் டிக் டாக் செயலியை வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, டிரம்பின் உத்தரவை அப்படியே ஏற்றுக் கொண்டு அமெரிக்காவை விட்டு சென்று விட டிக் டாக் விரும்பவில்லை.
கடைசியாக, டிரம்பை நீதிமன்றத்துக்கு இழுத்து மோதி பார்த்துவிட டிக் டாக் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் டிக் டாக் தலைமையகம் அமைந்துள்ள தெற்கு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் டிரம்பின் முடிவை எதிர்த்து வழக்கு தொடர டிக் டாக்கின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்கு டிக்டாக் அச்சுறுத்தலாக இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நிறுவனத்துக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்காதது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று டிக் டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தெரிவித்துள்ளது.
டிக் டாக் செயலிக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்ட தேதியிலிருந்து, 45 நாள்களுக்கு பிறகு, டிக் டாக்குடன் அமெரிக்கர்கள் வர்த்தக தொடர்பு வைத்திருந்தால் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments