' இந்தி அரசியல் காரணமாகவே காமராஜர், கருணாநிதியால் பிரதமராக முடியவில்லை!' - கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி
இந்தி அரசியலால்தான் காமராஜர், கருணாநிதி போன்ற தென்னிந்திய தலைவர்களால் பிரதமராக முடியவில்லை என்று மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசைமி தெரிவித்துள்ளார்.
தி.மு.க எம்.பி கனிமொழி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஐ.எஸ்.எப் பெண் அதிகாரி ஒருவர் 'நீங்கள் இந்தியரா?' என்று கேட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் , கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அளித்துள்ள பேட்டியில், இந்தி அரசியல் காரணமாகவே தென்னிந்தியர்களான காமராஜர், கருணாநிதி போன்றவர்கள் பிரதமராக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் குமாரசாமி கூறுகையில், '' என் தந்தை தேவகவுடா சற்று விதிவிலக்காக பிரதமரானாலும் மொழி காரணமாக அவர் விமர்சிக்கப்பட்டதும் கேலிக்குள்ளானதும் உண்டு. இந்தி பாலிடிக்ஸ் காரணமாகத்தான் 1990- ஆம் ஆண்டு என் தந்தை சுதந்திர தினத்தன்று ஹிந்தியில் உரை நிகழ்த்த நேரிட்டது. எனது சொந்த அனுபவத்திலிருந்தும் இந்தி மொழி தெரிந்த அரசியல்வாதிகள் இந்தி தெரியாத தென்னிந்திய அரசியல்வாதிகளை வெறுப்புணர்வுடன் அணுகுவதை அறிய முடிந்தது.
இந்தி அல்லாத அரசியல்வாரிகளை அவர்கள் மரியாதையுடன் நடத்துவதில்லை. பெரும்பாலான தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத மட்டுமே அனுமதிக்கப்படுவதற்கும் இந்த வெறுப்பு அரசியலே காரணம். இதனால், கன்னடர்களுக்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் இந்தி மொழி அரசியல்வாதிகள் தென்னிந்தியர்களின் அரசியல் வாய்ப்புகளை தட்டி பறித்தார்கள். கனி மொழியிடத்தில் நீங்கள் ஒரு இந்தியரா என்று கேள்வி எழுப்பியது கண்டனத்துக்குரியது. நான் சகோதரி கனிமொழியின் பக்கம் நிற்கிறேன் '' என்று தெரிவித்துள்ளார்.
Comments