சென்னையில் ஸ்பைடர் கேர்ள்.. 23 வது மாடியில் திகில் சாகசம்..! பந்தயம் கட்டியதால் விபரீதம்

0 103888

ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வருவது போல 25 மாடி கட்டிடத்தின் வெளிப்புற விளிம்பில் நடந்து சென்று காண்போரை பீதிக்குள்ளாக்கிய பெண்ணின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஸ்பைடர் மேன் படத்தில் பார்ப்பது போல மிக உயரமான அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றின் வெளிப்புறத்தில் நடந்து அதிர வைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர்..!

செங்கல்பட்டு மாவட்டம், பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் பகுதியில் ஹிரானந்தனி என்ற 25 மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 23வது மாடியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற விளிம்பில் தலைவிரிகோலமாக ஒரு பெண் நடந்து செல்வதை எதிர் பிளாட்டில் வசிப்போர் பார்த்துள்ளனர்.

பட்டப்பகலாக இருந்தாலும் சிலர் ஏதோ ஒரு உருவம் நடந்து செல்கிறது என வியப்புடன் வேடிக்கைபார்த்தவாறு நிற்க, கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் அந்த பெண் 3 முறை அந்த விளிம்பில் சுற்றியுள்ளார். இதனை மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

இதனை வைத்து விசாரித்ததில் இந்த விபரீத செயலில் ஈடுபட்டது 15 வயது சிறுமி என்பது தெரியவந்தது. இவரை போல மற்ற சிறுவர் சிறுமிகளும் விபரீத முயற்சியில் இறங்கிவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புக்கு நேரில் சென்று கேளம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அண்ணன் தங்கை இருவருக்கும் ஏற்பட்ட போட்டியில் யாருக்கு தில் அதிகம் என்பதை நிரூபிக்க ஆர்வ கோளாறில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இது போன்ற விபரீத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டனர். மீண்டும் இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்ததால் அவர்களை காவல்துறையினர் விடுவித்தனர்.

சாகசம் என்ற பெயரில் இது போன்ற விபரீதங்களில் ஈடுபடக்கூடாது என்றும் இது போன்ற செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments