ஒரே குடும்பத்தில் 11 பேர் விஷ ஊசி போட்டு கொலை ? அகதிகளுக்கு நேர்ந்தது என்ன?

0 10300

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே பூட்டிய வீட்டிற்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்தா கிராமத்தில் கேவல்ராம் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதியாக ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை விலைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தனர். பண்ணையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறிய வீடு ஒன்றை அமைத்திருந்தனர்.

சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த கேவல் ராம் காலையில் கண்விழித்து பார்த்த போது தோட்டத்திற்குள் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இதை கண்ட அவர் அதனை விரட்டி விட்டு வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் ? என சத்தமிட்டவாறே வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் படுத்திருந்த கேவல்ராமின் தந்தை புதாராம், தாய் அந்தரா தேவி 4 சகோதர, சகோதரிகள், 5 குழந்தைகள் என 11 பேரும் பேச்சு மூச்சில்லாமல் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சடலமாக கிடந்த இடத்தின் அருகே சில காலி மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசி போடும் சிரிஞ்சுகள் கிடந்தன. மேலும் உயிரிழந்த அனைவரது கைகளிலும் ஏதோ ஊசி போட்டது போல தழும்பு காணப்பட்டது. இதையடுத்து சடலங்களை கைப்பற்றி பிணகூறாய்வுக்கு எடுத்துச்சென்ற காவல்துறையினர் 11 பேர் உயிரிழப்புக்காண காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே கேவல்ராம், தன்னை விட்டு பிரிந்து வாழும் தனது மனைவி ஒரு செவிலியர் என்றும் அவரது தூண்டுதலின் பேரில் தனது குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கும் விஷ ஊசி போடப்பட்டிருக்கலாம் என்றும் புகார் அளித்துள்ளார். இதையடுத்து கேவல்ராமின் மனைவியை பிடித்து விசாரித்து வரும் காவல்துறையினர், பிணகூறாய்வு அறிக்கை கிடைத்த பின்னரே 11 பேரும் உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 11 பேரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தூங்கிய பின்னர் யாரோ அவர்களை விஷ ஊசி போட்டுக் கொன்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments