அயர்லாந்திலிருந்து எச்சரித்த ஃபேஸ்புக் ஊழியர்... மும்பையில் தற்கொலையைத் தடுத்த டெல்லி போலீஸ் - பரபர ட்ரேசிங்!

0 18485
Facebook

கொரோனா ஊரடங்கால் மனைவியுடன் சண்டை போட்டு ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றவரை அயர்லாந்திலிருந்து ஃபேஸ்புக் ஊழியரும் டெல்லி மற்றும் மும்பை போலிசாரும் சேர்ந்து காப்பாற்றியுள்ள சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான  மக்கள் வேலை இழந்து, உணவின்றி கடுமையான நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான் டெல்லியைச் சேர்ந்த 27 வயது வாலிபரும் வேலை இழந்து தவித்துள்ளார். வேலை இழப்பால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அவரது குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மனைவியுடன் சண்டை அதிகமாக வீட்டிலிருந்து சென்றுவிட்டார் அந்த வாலிபர்.

image

பிறகு,  ஃபேஸ்புக்கில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோவையும் பதிவிட்டார். உடனே அவரது பதிவுக்குச் சிவப்பு வண்ண எச்சரிக்கையை வெளிப்படுத்தியது ஃபேஸ்புக். இதனைக் கையாலும் அயர்லாந்தைச் சேர்ந்த ஊழியர் உடனே அவரைக் காப்பாற்ற நினைத்து, வாலிபரின் தொடர்பு எண்ணைக்கொண்டு டெல்லி சைபர் கிரைம் போலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.

தகவலைப் பெற்ற டெல்லி இணை ஆணையர் அனீஷ் ராய் உடனே கலத்தில் இறங்கினார். மொபைல் எண்ணை டிரேஸ் செய்து, முகவரியைக் கண்டுபிடித்துத் தேடிச் சென்றார். ஆனால், அந்த எண்ணை வாலிபரின் மனைவி பயன்படுத்தி வந்துள்ளார். தற்கொலை வீடியோ வெளியிட்டவர் மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு மும்பைக்குச் சென்றதும் தெரியவந்தது. உடனே அவரின் தற்போதைய மொபைல் எண்ணை வாங்கிய அனீஷ் ராய்  மும்பை போலிசாருக்குத் தகவல் கொடுத்தார்.

கண நேரமும் தாமதிக்காத மும்பை போலிசார் வாலிபரைத் தேடத் தொடங்கினர். அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் வாலிபரின் இருப்பிடத்தை அதிகாலை 1 மணியளவில் போலிசார் கண்டறிந்து காப்பாற்றியுள்ளனர்.

image

”கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றேன். பல மாதங்களாக வேலை இல்லை. இதனாலேயே மனைவியுடன் தினமும் சண்டை நடந்துவந்தது.. என் குழந்தையை நினைத்து எனக்குப் பயம் வந்துவிட்டது. அதனால் தான் விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள  முடிவெடுத்தேன்” என்று போலிசாரிடம் அழுதுள்ளார் அந்த வாலிபர்.

இப்போது, அவருக்குத் தகுந்த ஆலோசனைகள் வழங்கி அனுப்பி வைத்துள்ளனர் போலிசார். அயர்லாந்தைச் சேர்ந்த ஃபேஸ்புக் ஊழியர் மற்றும் இரு மாநில காவலர்கள் சேர்ந்து ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய நிகழ்வு பாராட்டத்தக்கது!  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments