இன்றியமையாததாகி போன ஆன்லைன் கல்வி...! பாதுகாப்பான இணைய பயன்பாடு எப்படி?

0 1481

ஆன்லைன் வகுப்புகள் இன்றியமையாததாக மாறி உள்ள சூழலில், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் பாதுகாப்பான முறையில் இணையத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

அரசுப் பள்ளி முதல் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வரை, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்குக்குப் பின் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாக இருந்து வரும் நிலையில், ஆன்லைன் வகுப்புகளே கதி என்று இருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்களை சமீபத்தில் அரசு வெளியிட்டிருந்தது.

அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களில் படுக்கை அறைகளில் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்கக் கூடாது, History-ஐ Delete செய்யக் கூடாது என்பன முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக கூறப்பட்டிருந்தன.

ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்கும் குழந்தைகள், பதின்ம வயதினர் இணையதளத்தை பயன்படுத்தும் போது, தேவையற்ற விளம்பரங்கள், ஆபாச இணையதளங்களைப் பார்க்காமல், பயன்படுத்தாமல் இருக்க பெற்றோரின் கண்காணிப்பு அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆன்லைன் வகுப்பில் பங்கெடுக்கும் குழந்தைகள், பதின்ம வயதினருக்கு பிரத்யேக E - Mail முகவரியை உருவாக்கி, அதனை families.google.com எனும் இணைப்பு மூலம் பெற்றோரின் E- Mail உடன் இணைத்து விட்டால், குழந்தைகளின் இணையதள நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், கண்டறியவும் முடியும் என்று விளக்குகின்றனர் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள்.

https://families.google.com/families எனும் இணைப்பில் சென்று பாடத்துக்கான செயலி நீங்கலாக பிற தேவையற்ற செயலிகளையும், வலைதளங்களையும் பயன்படுத்துவதைத் தவிர்க்க அதை Lock செய்து விடலாம். மேலும் எந்தெந்த செயலிகளை பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்பது போன்றவற்றையும் செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம் என்ற யோசனையையும் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர்.

https://www.commonsensemedia.org/ என்ற இணையதளத்தின் மூலமாக வயது வாரியாக குழந்தைகளுக்கு தேவையான செயலிகள் மற்றும் சரியான இணையதள வழிகாட்டுதல்களை பெற்றோர் தெரிந்து கொள்ளலாம் என்று வழிகாட்டும் வல்லுநர்கள், Google History-ஐ தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்றும், அதை குழந்தைகள் Delete செய்தால், குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி இணைய பாதுகாப்பு பற்றி பெற்றோர் விளக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

குழந்தைகள், பதின்ம வயதினரின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், அவர்களின் உடல்நலனையும் கவனிக்க வேண்டியது கட்டாயம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மின்னணுத் திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பதால் கண் சார்ந்த கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், Android Phone அல்லது லேப்டாப்-ஐ வீடுகளில் உள்ள அகண்ட திரை உடைய டிவிக்களுடன் இணைத்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் வீட்டில் தானே உள்ளனர் என்று நினைக்காமல், அவர்களை முறையாக வழிநடத்தி, கண்காணிப்பதே பெற்றோரின் தலையாய கடமை என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கு இடையே பிள்ளைகளுடன் பெற்றோர் கண்டிப்பாக உரையாடினால் மாணவர்களின் மன அழுத்தம் தீரும் என்றும் வல்லுநர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments