10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 100 சதவீத தேர்ச்சி..!
10ஆம் வகுப்பில் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக எஸ்எஸ்எல்சி தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால், பொதுத்தேர்வை நடத்த இயலாத சூழலில், பள்ளிகள் அளவில் நடைபெற்ற காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிவுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவர்கள் 4,71,759 பேரும், மாணவிகள் 4,68,070 பேரும் என பள்ளி மாணாக்கர்கள் மொத்தம் 9,39,829 பேர் உள்ள நிலையில், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் வாயிலாக மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படுவதால், மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்படாது.
மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், வரும் 17ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை, பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம் (www.dge.tn.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். வரும் 17ஆம் தேதி முதல், 21ஆம் தேதி வரை, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
Comments