கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு..!
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து தொடர்பாக, புலனாய்வு அமைப்பகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம், கரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது 30 அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்து இரண்டாகப் பிளந்தது.
இந்த விபத்தில் 18 பேர் உயிரிழக்க, 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள, கறுப்புப் பெட்டி டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளான புகைப்படங்கள் குறித்தும், விமானிகள் இருக்கும் காக்பிட் எனப்படும் அறை ஆகியவை குறித்து இந்திய விமானத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதில், காக்பிட்டின் சிதைவுகள் முழுமையாக முன்னோக்கி நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை டேக் ஆஃப் அல்லது கோ ரவுண்ட் அதாவது, விமானம் விழுந்துவிடும் என தெரியவரும் கடைசி நேரத்தில் விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி பறக்க வைக்கும் விமானிகளின் முயற்சி தோல்வி அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோல் விமானத்தின் இறக்கைகளில் மேல்புறத்தில் உள்ள பேனல்களும் விமானம் மேல் எழும்பும் போது அல்லது பறக்கும்போது இருப்பதைப் போன்று காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த விமானிகள் கடைசி நேரத்தில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதால், மங்களூரில் ஏற்பட்டது போல விமானம் தீப்பிடிக்காமல் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
புலனாய்வு அமைப்பகத்தின் முதற்கட்ட விசாரணையில், விமானம் தரையிறங்கிய போது கனமழை பெய்த காரணத்தால், ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீரால் பிரேக்கிங் சிஸ்டம் வேலை செய்யாமல், விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. விபத்திற்கு உறுதிப்படுத்தப்படாத பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள கறுப்பு பெட்டி மூலம் சரியான காரணம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments