உள்நாட்டு உற்பத்திக்கு ஊக்கம்... 101 ராணுவ தளவாட இறக்குமதிக்குத் தடை
உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான பாதுகாப்புத் தளவாடங்களின் இறக்குமதிக்குப் படிப்படியாகத் தடை விதிக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முப்படையினர், தொழில்துறையினர் ஆகியோரின் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின் தடைப் பட்டியலைப் பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்துள்ளதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். 101 பொருட்களில் துப்பாக்கிகள், போர்க் கப்பல்கள், சோனார் கருவிகள், போக்குவரத்துக்கான விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள் ஆகியன அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு இவ்வகைத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கக் கிடைத்த பெரும் வாய்ப்பு என்றும், பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான மிகப்பெரிய நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்புத் துறையில் நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் தளவாடக் கொள்முதலுக்கு 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டியுள்ளார். பாதுகாப்புத் தளவாட இறக்குமதிக்கான தடையை 2020 முதல் 2025 வரை படிப்படியாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், சக்கரம் பொருத்திய பீரங்கிகள் இறக்குமதிக்கு 2021 டிசம்பர் முதல் தடை விதிக்கப்படும் என்றும், 200 பீரங்கிகள் வாங்க ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2015 முதல் 2020 வரை முப்படைகளுக்கும் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்குத் தளவாடங்கள் கொள்முதல் செய்துள்ளதாகவும், அடுத்த ஏழாண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு உள்நாட்டில் தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments