தளர்வற்ற முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்

0 4821
தமிழ்நாடு முழுவதும், இன்று ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழகம்  முழுவதும் இன்று தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக் கடைகளை தவிர்த்து மற்ற அனைத்து வித கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலை மாதத்தை போலவே ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிறுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாநிலம் தழுவிய தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

காய்கறி, மளிகை உட்பட அனைத்து கடைகளும், பெட்ரோல் பங்குகளும், அனைத்து வித வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பால் விற்பனை நிலையங்கள், மருந்துக்கடைகள் மட்டும் செயல்படுகின்றன.

சாலைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு சென்றவர்களையும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் சோதனைக்கு பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், சென்னை காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேவையின்றி சுற்றி திரிவோரது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் பிரதான சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகள் வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. மாநகர் முழுவதும் 193 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேவையின்றி சுற்றித்திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. தியாகராயநகர், பாண்டி பஜார் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கபட்டுள்ளன. மேம்பாலங்கள் தடுப்புகள் கொண்டு மூடப்பட்டுள்ளன.

தளர்வுகளற்ற முழுஊரடங்கு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடிப் போயுள்ளன.

கரூரில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தளர்வில்லாத முழுஊரடங்கு காரணமாக, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நெல்லை டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு, காய்கறி சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாலைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடியது.

சேலத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதோடு, எப்போதும் பரபரப்பாக காணப்படும் . சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக தஞ்சையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் தடையை மீறி பெட்ரோல் பங்குகள் செயல்பட்டன. கும்பகோணத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், தேவையின்றி வெளியே வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

மதுரை மாவட்டத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  ஜெய்ஹிந்த்புரம்,  பழங்காநத்தம், தெற்குவாசல், சிம்மக்கல், நெல்பேட்டை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. 100க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டுள்ளனர்.

தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில்  சுமார் 2500 காவலர்கள் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும்  135 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி தனிமனித இடைவெளியின்றி பூச்சந்தை செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருவண்ணாமலை புறவழிச்சாலை பகுதியிலுள்ள கீழ்நாத்தூர் அருகே தடையை மீறி பூ வியாபாரம் நடைபெற்றது. தனிமனித இடைவெளி உட்பட எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் வியாபாரிகள் பூக்களை வாங்கி சென்றனர். தடையை மீறி பூ வியாபாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இன்று தளர்வுகளில்லா  முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் நகரில் முழு ஊரடங்கையொட்டி காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம்  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடின.

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் சுமார் 2000 போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி உரக்கடைகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தளர்வற்ற முழு ஊரடங்கை மீறி சுற்றியவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில்  வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள போலீசார், ஊரடங்கை மீறி உலா வரும் வாகனஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். 

முழு ஊரடங்கையொட்டி சேலத்தில் உள்ள அனைத்து மளிகை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

கரூர் மாவட்டத்திலும் முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டதால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தேவையின்றி வெளியே வருவோரை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளிலும் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பயணிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை தளர்வற்ற முழு ஊரடங்கையொட்டி தூத்துக்குடியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்து வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments