மதுரை காமராஜர் பல்கலையில் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க ரூ.3.5 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்கத்தில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த தேர்வில் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம், திருவனந்தபுரம், மலப்புரம் ஆகிய 3 தேர்வு மையங்களில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில், தேர்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர், அந்த 3 மையங்களில் எழுதப்பட்ட விடைத்தாள்களில் சிலவற்றுக்கு மாற்று எண்கள் வழங்கி, மாற்று விடைத்தாள்களை இடையில் சேர்த்ததாக கூறப்படுகின்றது.
இதற்காக மாணவர்களிடம் இருந்து சுமார் மூன்றரை கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பல்கலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த இருவர் தலைமையிலான விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
Comments