கர்நாடக அணைகளில் நீர் திறப்பு... தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள 3 அணைகளில் இருந்து காவிரியில் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் மடிக்கேரி, பாகமண்டலா உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 67 ஆயிரத்து 817 கன அடியாக அதிகரித்துள்ளது.
128 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் 117 அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 43 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கேரளத்தின் வயநாடு மாவட்டம், அதையொட்டிய கர்நாடகப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நொடிக்கு எழுபதாயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்புக் கருதி 70 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதேபோல் கபினி அணையின் துணை அணையான நுகு அணையில் இருந்து நொடிக்கு ஆறாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் 3 அணைகளில் இருந்தும் இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 19 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மைசூர் மாவட்டத்தில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள், கோவில்கள், விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆற்றில் அமைந்துள்ள தரைப் பாலங்கள் மூழ்கி வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கிறது.
Comments