கோழிக்கோடு : விபத்தே இல்லாமல் 30 வருடங்கள் விமானம் ஓட்டியவர் கேப்டன் தீபக் வி. சாத்தே!
கடந்த 30 ஆண்டுகளாக விமானம் ஓட்டிவரும் விமானி தீபக் வி. சாத்தே கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தது ஏர்இந்தியா நிறுவன ஊழியர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கோழிக்கோடு வந்த ஏர்இந்தியா விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தின் விமானி தீபக் வி. சாத்தே உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்தனர். மும்பையை சேர்ந்த விமானி தீபக் வி. சாத்தே 30 ஆண்டுகளாக விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர்.
இந்திய விமானப்படையில் விங் கமாண்டராக 17- வது ஸ்குவாட்ரான் அம்பாலாவில் பணியாற்றியவர். அப்போது, மிக்- 21 விமானத்தை இயக்கி அனுபவம் பெற்றவர்.
புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற பிறகு விமானப்படையில் இணைந்தார். இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார். சிறந்த ஸ்குவாஷ் வீரரும் கூட. கடந்த 2013-ம் ஆண்டு விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கடந்த 17 ஆண்டுகளாக ஏர்இந்தியாவில் பணி புரிந்து வருகிறார்.
அனுபவம் கொண்டவர் என்பதால், ஏர்இந்தியாவில் சற்று பழமையான விமானங்களை கேப்டன் தீபக் வி. சாத்தே இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. ஏர் இந்தியாவில் ஏர்பஸ் - 310 ரக விமானங்களை இயக்கியுள்ளார். ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு மாறிய பிறகு போயிங்- 737 ரக விமானத்தை இயக்கியுள்ளார். கோழிக்கோட்டில் விபத்தில் சிக்கிய விமானம் கூட சற்று பழமையானது என்கிற தகவலும் உள்ளது. இந்த விமானத்தின் துணை விமானி கேப்டன் அகிலேஷ் குமாரும் விபத்தில் பலியாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோழிக்கோடு விபத்தில் சிக்கிய விமானத்தை கடைசிக்கட்டத்தில் இன்ஜீனை கேப்டன் தீபக் சாத்தே அணைத்துள்ளார். இதனால், விமானம் வேகம் குறைந்து ரன்வேயில் சறுக்கிக் கொண்டே சென்று இரண்டு துண்டாக உடைந்துள்ளது. அதேவேளையில், விமானம் தீ பிடிக்காமல் தப்பியுள்ளது. இதனாலேயே, விபத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது. விமானியின் சமயோஜித முயற்சியால் ஏராளமான உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இவரின், 30 ஆண்டு கால சேவையில் இவர் இயக்கிய விமானங்கள் ஒரு முறை கூட சிறு விபத்தில் கூட சிக்கியதில்லை. ஆனால், முதல் விபத்திலேயே உயிரிழந்தும் போனது ஏர் இந்தியாவில் பணி புரிந்து வரும் அவரின் நண்பர்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. தற்போது 58 வயதான தீபக் வி. சாத்தேவுக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
கொரோனா ஊரடங்குக்கு முன், நடிகர் பிரிதிவிராஜ் ஆடுஜீவிதம் என்ற மலையாள சினிமா படப்பிடிப்புக்காக படக்குழுவுடன் ஜோர்டான் சென்று சிக்கிக் கொண்டார். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் , நடிகர் பிரிதிவிராஜ் படக்குழுவினர் வந்தே பாரத் திட்டத்தின் கீழ்தான் மீட்கப்பட்டனர்.
கோழிக்கோடு விபத்தில் விமானி தீபக் வி. சாத்தே பலியானது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரிதிவிராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கேப்டன் தீபக் வி. சாத்தேவுடன் தான் உரையாடியுள்ளதாக பிரிதிவிராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கோழிக்கோடு : விபத்தே இல்லாமல் 30 வருடங்கள் விமானம் ஓட்டியவர் பைலட் தீபக் வி. சாத்தே!#KozhikodePlaneCrash #DeepakSathe #Kozhikode https://t.co/idt66DoOpf
— Polimer News (@polimernews) August 8, 2020
Comments