இரண்டாக பிளந்த விமானம்... விமானியின் முயற்சியால் பேரிழப்பு தவிர்ப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரகத்தை சேர்ந்த விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணியாளர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் இரவு 7.40 மணியளவில் அந்த விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது ஓடு பாதையில் இருந்து சறுக்கிய விமானம் அருகில் இருந்த 30 அடி பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில், விமானி, துணை விமானி உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.
120க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம், கேட்டறிந்த பிரதமர் மோடி, தேவையான உதவிகளை வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்து இருந்த விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான விபத்து தொடர்பான விசாரணை பணியகம் விரிவான விசாரனையை மேற்கொள்ளும் என தெரிவித்து இருந்தார்.
அதைதொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விபத்து தொடர்பாக, இரண்டு உயர்மட்ட விசாரணைக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதைதொடர்ந்து, விமான போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து இயக்குனரகம், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் விசாரணை அதிகாரிகள் இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
டேபிள் டாப் முறையில் அமைந்துள்ள இந்த விமான நிலையத்தில் ஓடுபாதையை தெளிவாக காண்பதற்காக, சென்டர் லைட் முறையில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய 10வது ஓடுதளத்தில் இத்தகைய மின்விளக்குகள் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஏற்பட்ட போதிய வெளிச்சமின்மை காரணமாகக் கூட விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே,விபத்தை தொடர்ந்து கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வரக்கூடிய அனைத்து விமானங்களும் கன்னூர் மற்றும் கொச்சின் சர்வதேச விமான நிலையங்களுக்கு மாற்றி விடப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு விபத்தில் சிக்கிய விமானத்தை கடைசிக்கட்டத்தில் இன்ஜீனை கேப்டன் தீபக் சாத்தே அணைத்துள்ளார். இதனால், விமானம் வேகம் குறைந்து ரன்வேயில் இழுத்து செல்லப்பட்டுள்ளது. விமானம் தீ பிடிக்காமல் தப்பியுள்ளது. தீ பிடித்தால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கும். விமானியின் சமயோஜித முயற்சியால் ஏராளமான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
Comments