சென்னைத் துறைமுகத்தின் ரூ. 45 கோடி மோசடி..!

0 2317

சென்னைத் துறைமுக அதிகாரிகள் எனக்கூறித் துறைமுகத்தின் 45 கோடி ரூபாயை மோசடி செய்த இந்தியன் வங்கி மேலாளர் உட்பட மூவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

சென்னைத் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் நூறு கோடி ரூபாயை மார்ச் மாதம் 7ஆம் தேதி கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் நிலையான வைப்பு நிதியாகச் செலுத்தியுள்ளனர்.

மூன்று நாட்களுக்குப் பின் கணேஷ் நடராஜன் என்பவர் சென்னைத் துறைமுகத்தின் துணை இயக்குநர் எனக் கூறிக் கொண்டு, நிலைவைப்புக் கணக்கில் உள்ள நூறு கோடி ரூபாயை இரண்டு நடப்புக் கணக்குகளில் தலா 50 கோடி ரூபாயாக மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்த அவர் சென்னைத் துறைமுகத்தின் பரிந்துரைக் கடிதம், அனுமதிச் சான்று ஆகியவற்றைப் போலியாகத் தயாரித்துக் கணக்குகளைத் தொடங்கியதாகவும், இதற்குக் கோயம்பேடு இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதிராஜா உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கணேஷ் நடராஜன், மணிமொழி ஆகிய இருவரும் சேர்ந்து முதற்கட்டமாக நடப்புக் கணக்குக்கு மாற்றப்பட்ட 50 கோடி ரூபாயில் 45 கோடி ரூபாயைப் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில் வங்கியில் இருந்த பிற ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று, மற்றொரு நடப்புக் கணக்கில் இருந்த 50 கோடி ரூபாயை மாற்ற மணிமொழி, செல்வக்குமார் ஆகியோர் வந்தபோது வங்கி அதிகாரிகள் உதவியுடன், கோயம்பேடு காவல்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் மோசடி அம்பலமானது. மோசடியில் மத்திய அரசு ஊழியர்களுக்குத் தொடர்பு இருப்பதால், சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் துறைமுக அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்த கணேஷ் நடராஜன், மணிமொழி, இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதிராஜா மற்றும் அடையாளம் காணப்படாத ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியாகப் பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்ட 45 கோடி ரூபாய் போக மீதமுள்ள பணத்தை முடக்கிச் சென்னைத் துறைமுக பொறுப்பு கழகத்திடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments