சென்னை-போர்ட் பிளேர் கண்ணாடி இழை திட்டத்தை வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
சென்னையில் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் வரை அமைக்கப்பட்டுள்ள 2300 கிலோ மீட்டர் நீள கடலுக்கு அடியிலான கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 10 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த உதவும் இந்த திட்டத்தை அவர் காணோலி வாயிலாக துவக்கி வைக்க உள்ளார். சென்னையில் இருந்து போர்ட் பிளேர் வரை போடப்பட்டுள்ள இந்த கேபிள், அந்தமான் நிக்கோபாரில் உள்ள பல தீவுகளுக்கு இடையேயும் இணைக்கப்படுகிறது. இதனால் அங்கு செல்போன் மற்றும் தரைவழி தகவல் தொடர்பு விரைவாக செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1224 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி போர்ட் பிளேரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தால் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்டர்நெட் பயன்பாட்டு செலவும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments