'குற்றவாளியே... ராஜினாமா செய்’ - வெடிவிபத்தைத் தொடர்ந்து போராட்டத்தால் பற்றியெரியும் பெய்ரூட்!

0 13458
லெபனான் போராட்டக்காரர்கள்

லெபனான் நாட்டின் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வெடிவிபத்தின் மீட்புப் பணிகள் கூட இன்னும் முடிவடையாத நிலையில் ஆளும் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொதுமக்கள் சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறியதில் 150 - க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஐந்தாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த வெடி விபத்தில் சுமார் 3,00,000 க்கும் அதிகமான மக்கள் தம் வீடுகளை இழந்தனர்.

image

மேலும், வெடி விபத்தால் உருவான கான்கிரீட் மற்றும் உடைந்த கண்ணாடித் துண்டுகள் இன்னும் சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன. பெய்ரூட் நகரில் 75 சதவிகிதத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் குலுங்கி, சேதமடைந்துள்ளன. இந்தக் கான்கிரீட் துண்டுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறது லெபனான்.  இந்தக் கோரமான வெடி விபத்துக்கு அரசாங்கம் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொது மக்களுக்கு உரிய நிவாரணம் அளிக்க முடியாமல் திணறி வருகிறது. பலர் வீடுகளை இழந்து சாலைகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

ஏற்கெனவே, பொருளாதார பிரச்னை, உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வெடி விபத்தால் இருந்தவற்றையும் இழந்து நடுவீதியில் தவிக்கின்றனர். இந்த மோசமான நிலைக்கு ஆளும் லெபனான் அரசின் அலட்சியம் தான் காரணம் என்று பொதுமக்கள் கோபத்துடன் சாலைகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். ஏராளமானோர், நாடாளுமன்றத்துக்கு முன் கூடி சாலைகளில் தீ வைத்தும், கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக் காரர்களுக்கு ஆதரவாகப் பொதுமக்களும் சாலைகளில் திரண்டுவருகின்றனர்.

image

போராட்டக்காரர்கள், “குற்றவாளியே... ராஜினாமா செய்” என்று ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருகின்றனர். பலரும் சாலைகளில் திரண்டுவருவதால், பெய்ரூட் போராட்டக் கலமாக மாறிவருகிறது. காவல்துறையினர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் களைத்துவருகின்றனர்.

வெடி விபத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்தே மீள வழி தெரியாமல் லெபனான் அரசு தவித்துவரும் சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments