லெபனான் வெடி விபத்தை தொடர்ந்து சென்னையில் பாதுகாப்பு நடவடிக்கை

0 1280

சென்னை மணலியில் அம்மோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் சுங்கத்துறையும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் முரண்பட்ட தகவல்களை அளித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, அம்மோனியம் நைட்ரேட் உள்ள கண்டெய்னர்களை தனியே பாதுகாப்பாக பிரித்து வைக்கும் பணி நடைபெற்றது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடித்துச் சிதறி பேரிழப்பை ஏற்படுத்திய அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள், சென்னையிலும் 740 டன் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டு, சென்னை மணலி புதுநகரில், சுங்கத்துறை கிடங்கில் 5 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. அதில் 690 டன் மட்டுமே தற்போது மின்னணு ஏலத்தில் விடப்பட்டுள்ளதாகவும், சுமார் 50 டன் 2015ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் வீணாகி விட்டதாகவும் சுங்கத்துறை கூறியது.

நீதிமன்ற உத்தரப்படி மின்னனு ஏலம் விடும் பணி முடிந்து, அப்புறப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தது. அம்மோனியம் நைட்ரேட் உள்ள கண்டெய்னர்கள் பாதுகாப்பாக உள்ளது என்றும், கிடங்கை சுற்றி 2 கிலோமீட்டர் சுற்றளவில் எந்த குடியிருப்பும் இல்லை எனவும் அறிக்கை மூலம் சுங்கத்துறை தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்தின், சுற்றுச்சூழல் முதன்மை பொறியாளர் மலையாண்டி உள்ளிட்ட அதிகாரிகளும், தீயணைப்பு துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உள்ளிட்ட அதிகாரிகளும் நேற்றைய தினம் மணலி புது நகரில் உள்ள சாட்வா கிடங்கில் நேரில் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, மாசு கட்டுபாட்டு வாரிய குழுவினர் அளித்துள்ள அறிக்கையில், 700 மீட்டர் தொலைவில் சடையாங்குப்பம் பகுதியில் ஏழாயிரம் குடியிருப்புகள் உள்ளதாகவும், 1,500 மீட்டர் தொலைவில் ஐயாயிரம் குடியிருப்புகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு முதல் நரசிம்மன் என்பவர் 18 ஏக்கர் பரப்பளவில் நடத்தி வரும் சாட்வா கிடங்கில், சுங்கத்துறையின் இந்த கண்டெய்னர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மின்னணு ஏலம் முடிந்துவிட்டதாக சுங்கத் துறை நேற்று தெரிவித்த நிலையில், மின்னணு ஏலம் முடிவடைய இன்னும் மூன்று நாட்களாகும் என சுங்க அதிகாரிகள் தெரிவித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு செம்படம்பர் 9-ந் தேதி முதல் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களை, சுற்றுசூழல் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையின் மூலம் சுங்கத்துறைக்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கண்டெய்னர்களை அப்புறப்படுத்தும் வரை ஊழியர்கள், சுற்றியுள்ளவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments