சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் உள்ளதா? விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு
சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட சாத்தியக்கூறுகள் மற்றும் அதை உள்ளாட்சி அமைப்புகளின் இணையதளத்தில் வெளியிட வாய்ப்புள்ளதா என்பன குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிக்கையை அனைத்து மாநில மொழிகளிலும் வெளியிட உத்தரவிட வேண்டும் எனவும் அது வரை வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது இன்று மீண்டும் நடந்த விசாரணையில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், இந்த மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், செப்டம்பர் 7 வரை தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றம் தடையை நீக்கக் கூடும் என்பதால், வரைவு அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் தடையை நீக்கினால், நீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் மனுதாரருக்கு அறிவுறுத்தினர். இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளரையும் எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Comments