கர்நாடகத்தில் இருந்து காவிரியில் 51,000 கனஅடி நீர் திறப்பு..!
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள அணைகளில் இருந்து நொடிக்கு 51 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 37ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கேரளத்தின் வயநாடு, கர்நாடகத்தின் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 124 புள்ளி 8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி 113 புள்ளி 8 அடிக்குத் தண்ணீர் நிரம்பியுள்ளது.
அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 48 ஆயிரத்து 955 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் திறப்பு நொடிக்கு ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது. இதேபோலக் கபினி அணைக்கு நொடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில், அணையின் பாதுகாப்புக் கருதி நொடிக்கு 50,000 கனஅடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இரு அணைகளில் இருந்தும் காவிரியில் 51 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக வரும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நொடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் நொடிக்கு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மெயின் அருவி தண்ணீரில் மூழ்கி உள்ளது. ஐந்தருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது.
ஊரடங்கால் ஒகேனக்கல்லுக்குச் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருவதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவிரிக் கரையோரம் தாழ்வான பகுதிகளில் குடியிருப்போர் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லும்படி தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை ஆறாயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று காலை முப்பதாயிரம் கன அடியாக அதிகரித்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே காவிரிப் பாசன மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்குத் திறக்கப்பட்ட நீர் மூவாயிரம் கன அடியில் இருந்து ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65 புள்ளி 5 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 29 டிஎம்சியாக உள்ளது.
Comments