இந்தியாவை தொடர்ந்து, அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு தடை..!
இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் மற்றும் வீசாட் உள்ளிட்ட 106 சீன செயலிகளை இந்தியா தடை செய்தபோது, அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்திருந்தார். சீன நிறுவனங்களின், மொபைல் பயன்பாட்டு மென்பொருள்கள் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாட்டின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்ட அவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும் பொருளாதாரத்திற்கும் இரண்டு சீன ஆப்களும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்த இரு செயலிகளுக்குமான தடை 45 நாட்களில் அமலுக்கு வருகிறது. டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகள், பயனாளர்களின் விவரங்களை திரட்டுவதாகவும், அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் அவர்களுக்கு சொந்தமான தகவல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி வசம் சென்றுவிடுவதற்கான அச்சுறுத்தலை இது ஏற்படுத்துவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விவரங்களை உளவுபார்க்கவும், அவர்களது தனிப்பட்ட விவரங்களை திரட்டி பிளாக்மெயில் செய்வதற்கும், கார்ப்பரேட்டுகளை உளவு பார்ப்பதற்கும் இது வழிவகுத்து விடும் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சி பயனடையும் வகையில் தவறான தகவல்களை பரப்புவதற்கும் டிக்டாக் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். இந்த அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், டிக்டாக் செயலிக்கு உரிமையாளரான பைட்டான்ஸ் ((ByteDance)) மற்றும் வீசாட் செயலிக்கு உரிமையாளரான டென்சென்ட் ((Tencent)) ஆகிய சீன நிறுவனங்களோடு அமெரிக்காவில் யாரும் அல்லது எந்த நிறுவனமும் எவ்வித பரிவர்த்தனைகளையும் வைத்துக்கொள்வதை தடை செய்வதாக டிரம்பின் உத்தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#BREAKING Trump signs executive order banning transactions with TikTok parent after 45 days pic.twitter.com/zIM1NJoqpK
— AFP news agency (@AFP) August 7, 2020
Comments