ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க 1200 மனுக்கள்..! தீர்ப்புக்கு முன் திருப்பம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி 1200 பேர் ஒரே நாளில் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் தீர்ப்பு வர உள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள திருப்பம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அதனை மீண்டும் திறக்க வேண்டும் என அண்மைக் காலமாக சிறு சிறு குழுக்களாக பலர் மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனு அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் வியாழக்கிழமை தூத்துக்குடி தொழில்துறை விற்பன்னர்கள் சங்கம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரியை சந்தித்து மனு அளித்தனர்.
அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடியதால் ஏற்கனவே பெரும் பாதிப்படைந்ததாகவும், உதிரிபாகங்கள் விற்பனை மந்தமாகி உள்ளதால் தற்போது தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் அதனை மீட்டெடுக்க மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
வழக்கமாக சம்பந்தப்பட்டவர்கள் மனுவை மட்டுமே கொண்டு வருவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதி என்பதால் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரியும் 1200 பேர் பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், தாங்கள் அளிக்கும் மனுக்களால் திருப்பம் நிகழ்ந்து விடாதா? என்ற ஏக்கத்தில் லாரி டிரான்ஸ் போர்ட் உரிமையாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், தொழில்துறை விற்பனர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள், என அடுத்தடுத்து ஒவ்வொரு குழுவாக கோரிக்கை மனுக்களை அளித்து வருவதாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் கனரக வாகன போக்குவரத்து நெருக்கடி இல்லாமல், காற்று மாசு குறைந்து மழைவளம் பெருகி விவசாயம் செழிப்பாக உள்ளதாலும், தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதாலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமத்தினர் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க 1200 மனுக்கள்..! தீர்ப்புக்கு முன் திருப்பம் #Tuticorin | #Sterlite https://t.co/FIzolPy3Rq
— Polimer News (@polimernews) August 7, 2020
Comments