நீலகிரி மாவட்டத்தில் 4வது நாளாக நீடிக்கும் கனமழை.. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது
நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பெரும்பாலான பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால், ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பிகள் அறுந்து விழுந்து பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது, பலத்த மழைக்கு இடையிலும், மீட்பு குழு உதவியுடன் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் மரங்களை அகற்றி சாலைகளை சீரமைத்து வருகின்றனர். மஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த பெட்ரோல் பங்கின் மேற்கூரை காற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆற்றங்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். பாதுகாப்பாக வீடுகளிலேயே இருக்கவோ அல்லது முகாம்களுக்கு செல்லவோ கேட்டுக்கொண்டனர்.
சென்னையில் இருந்து சென்ற மீட்பு படையினர் 4 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நீடிக்கும் கனமழையால் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 585 மில்லி மீட்டர் மழையும், கூடலூர் பகுதியில் 335 மில்லி மீட்டர் மழையும், அப்பர் பவானியில் 319 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
கூடலூர் பகுதியை ஒட்டியுள்ள காலம்புழா, தேன்வயல், இருவயல் ஆகிய பகுதிகள் வெள்ளக்கடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடுகிறது. முன்னதாக அந்த பகுதிகளில் வசிக்கும் 220 பேர் பாதுகாப்பாக பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால், 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 95 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக, பவானி ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து எந்நேரமும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால், ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments