பெய்ரூட் போல சென்னை துறைமுகத்திலும் 5 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட் - அச்சத்தில் அதிகாரிகள்!
கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் அனுமதியில்லாமல் இறக்குமதி செய்த 740 டன் அம்மோனியம் நைட்ரேட், சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளாக வடசென்னை துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. லெபனான், பெய்ரூட்டைப் போல வெடிவிபத்து ஏற்பட்டு விடுமோ எனும் அச்சத்தில், அம்மோனியம் நைட்ரேட்டை எப்படிப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தலாம் என்று அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தின் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2750 டன் அம்மோனியம் நைட்ரேட் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதற,அந்த நகரமே உருக்குலைந்தது. இந்தக் கோர விபத்தில், இதுவரை 138 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 4000- க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வரலாற்றில் அணு பயன்படுத்தாத மிகப்பெரிய வெடி விபத்தாக இது பார்க்கப்படுகிறது. இந்தக் கோர விபத்தில் பெய்ரூட் நகரில் 3,00,000 மக்கள் வீட்டை இழந்துள்ளனர். மக்கள் உணவு, மருந்துப் பொருள்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
விபத்துக்கு சுங்கத்துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்குக் காரணமான அதிகாரிகள் இப்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். லெபனான் விபத்து உலக நாடுகள் அனைத்தையும் விழிப்படையச் செய்துள்ளது. ஒவ்வொரு நாடுகளும் தங்கள் துறைமுகத்தில் வெடிபொருள்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்து வருகின்றன.
லெபனானைப் போல சென்னையிலும், 740 டன் அம்மோனியம் நைட்ரேட் துறைமுகக் கிடங்கில் ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. 2015 - ம் ஆண்டு, கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் உரிய ஆவணங்கள் இல்லாமல்அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ததது. இப்போது, இந்த அம்மோனியம் நைட்ரேட் 37 கன்டெய்னர்களில் வடசென்னை துறைமுகக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள், “துறைமுகத்தில், ஒவ்வொரு சரக்குகளும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தனித்துவமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த நடைமுறையைப் பின்பற்றுகிறோம். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை வைக்கப்பட்ட சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பு நடைமுறைகளை பலப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
லெபனானில் விபத்து ஏற்பட்டதைப் போல சென்னையிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இப்போது அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. அதனால், சுங்கத்துறை அதிகாரிகள் பெட்ரோலியம், எக்ஸ்ப்ளோசிவ் சேஃப்டி (PESO) அதிகாரிகளுடன் சேர்ந்து கிடங்கில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட் போல சென்னை துறைமுகத்திலும் 6 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டுள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட் - அச்சத்தில் அதிகாரிகள்! #Chennaiport #Chennai #BeirutBlast https://t.co/LuYJOBjTse
— Polimer News (@polimernews) August 6, 2020
Comments