மும்பையில் கனமழை.. இயல்பு வாழ்க்கை முடங்கியது..!
மும்பையில் பெய்துவரும் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிப்பில் இருந்து மீள அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக ராய்காட், மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மும்பையில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க, பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. ஹிந்த்மாதா, சர்ச்கேட் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி ஊர்ந்து சென்றன.
இந்நிலையில், மஸ்ஜித் மற்றும் பாய்காலா ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளப் பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் ரயில்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடுவழியில் நின்ற 2 உள்ளுர் ரயில்களில் இருந்து, பேரிடர் மீட்புபடையினர் படகுகள் மூலம் 290 பயணிகளை மீட்டனர்.
பிரிஹன் மும்பை பகுதியில் உள்ள ஜேஜே மருத்துவமனை வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்குப்பிறகு மழைநீர் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டது.
நேற்று முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவுடன் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் தற்போதைய சூழல் தொடர்பாக கேட்டு அறிந்தார். தொடர்ந்து, மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப மத்திய அரசால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவின் கடலோர மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments