சீன அதிபரால் தெருவுக்கு வந்த டிக்டாக் அதிபர்..!

0 46534

உலக நாடுகளை பகைத்துக் கொண்ட சீன அதிபரின் அவசரபுத்தியால் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கு தன்னுடைய டிக்டாக் செயலியை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் டிக்டாக் அதிபர் சாங் யிமிங்...

உபயோகிப்போரை பித்து பிடித்தவர்கள் போல ஆட்டிவைத்த டிக்டாக் செயலியின் அதிபர் 37 வயதான சாங் யிமிங் இவர் தான்..!

உலகம் முழுவதும் டிக் டாக் செயலியை 80 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் நிலையில் டிக்டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், தொடங்கப்பட்ட 8 ஆண்டுகளில் வியக்கத்தகு வளர்ச்சி பெற்றது.. சீனாவிலிருந்து தோன்றி உலகளவில் வெற்றிக்கொடி நாட்டிய முதல் இணைய நிறுவனமும் இதுவே..!

குறுகிய காலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் வளர்ச்சி பெற்ற டிக்டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட்-டான்ஸின் தலைவர்தான் சாங் யிமிங். சீன கம்யூம்னிஸ்ட் அரசின் தணிக்கைகள் மற்றும் இறுக்கமான இணையக் கட்டுப்பாடுகளில் சிக்காதபடி, சீனாவைத் தவிர்த்து உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும்படி வீடியோ செயலியை உருவாக்கினார்.

அதாவது, சீனாவில் மட்டும் இயங்கும் வகையில் ’டோயுன்’ செயலி, சீனாவைத் தவிர்த்த உலகமெங்கும் இயங்கும் வகையில் ’டிக்டாக்’ செயலி என்று புத்திசாலித்தனத்துடன் தனது முதல் அடியை முன்வைத்தார்.

செயலிகளைப் பயன்படுத்துவோர் குறித்த தரவுகள் அனைத்தையும் சிங்கப்பூரிலும் விர்ஜீனியாவிலும் சேமித்து வைத்தார். சீனாவைச் சேர்ந்த நிறுவனமான பைட் டான்ஸ், சீனாவுக்கு ஆதரவாக தகவல் திருட்டில் ஈடுபடுகின்றது எனும் பரப்புரைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பணியாளர்களையும் மேலாளர்களையும் அமெரிக்காவிலிருந்தே தேர்ந்தெடுத்தார்.

இத்தனை ராஜ தந்திர நடவடிக்கைகள் எடுத்தும் கடைசியில் டிக்டாக் நிறுவனம் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தகப் போரில் சிக்கிக்கொண்டுவிட்டது. தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ’டிக்டாக்கை ஏதாவதொரு அமெரிக்க கம்பெனிக்கு விற்றுவிடவேண்டும்; இல்லையேல் நிரந்தரமாகத் தடைவிதிப்போம்’ என்று பகிரங்கமாகவே மிரட்டியுள்ளார். இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், கடும் அழுத்தம் கொடுத்து டிக்டாக்கை மிகக் குறைந்த விலைக்கு வாங்க முயன்று வருகிறது.

‘சீன அரசு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான ஸீ ஜின்பிங் தான், சீன மக்கள் மற்றும் சீன நிறுவனங்கள் அனைத்துக்கும் இறுதி அதிகாரம் மிக்கவர்’ என்ற அரசியல் அமைப்பு வழங்கிய அதிகாரம் தான் இத்தனைப் பிரச்னைகளுக்கும் மூல காரணமாகியுள்ளது. இந்த அதிகாரம் மூலம் ஸீ ஜின்பிங் சீனாவைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் தரவுகளை வேண்டுமானாலும் பெற முடியும். சீன நிறுவனங்கள் மூலம் உளவு வேலைகளிலும் ஈடுபட முடியும். இதுதான் டிக் டாக் நிறுவனத்துக்கு இந்தியாவில் மூடுவிழா நடத்த வழி வகுத்தது

பைட் டான்ஸ் நிறுவனம் டிக்டாக்கை., இந்தியா, ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அப்பால் மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியிருந்தது. இந்தியாவைப் போன்றே முன்னதாக 2018 - ம் ஆண்டு இந்தோனேசியாவும் ஹோஸ்டிங் பிரச்னையால் டிக்டாக்கை தடை செய்தது. தற்போது இந்த நாடுகள் வரிசையில் உலகின் வல்லரசான அமெரிக்காவும் சேரவுள்ளது.

சீனாவுக்கும் உலக நாடுகளுக்கும் இடையேயான பனிப்போரில் சாங் யிமிங் பலிகடா ஆகியிருக்கிறார் என்பதை உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments