தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதாக உயர்நீதிமன்றம் கருத்து
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் பரவி வருவதாகக் கவலை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டவனைக் குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதாகவும், குண்டர்கள், குற்றவாளிகள், அரசியல்வாதிகள் துப்பாக்கி உரிமம் வைத்திருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
பீகார், ஜார்க்கண்டில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு உரிய நடவடிக்கை எடுத்துத் துப்பாக்கிக் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரராகச் சேர்த்த நீதிபதிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Comments