டிஜிட்டல் மயமாகும் மருத்துவத்துறை... இந்தியர்களுக்கு சுகாதார அடையாள அட்டை

0 5410
ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் மருத்துவசேவையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் விதமான கட்டமைப்பை ஏற்படுத்தும் நோக்கில், தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தினை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இதற்கான முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இந்த வார முடிவிற்குள் அதற்கு இறுதி ஒப்பந்தம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, வரும் சுதந்திர தினத்தன்று இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்யேக செயலியை அடிப்படையாகக் கொண்ட இந்த திட்டமானது நான்கு முக்கிய அம்சங்களை கொண்டு நடைமுறைத்தப்பட உள்ளது. அதன்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுகாதாரத்திற்கான தனிஅடையாள அட்டை வழங்குதல், தனிநபர் சுகாதார பதிவுகள், ஆன்லைனில் மருத்துவர்களின் அறிவுரைகளை பெறுதல், மருத்துவமனைகளின் சுகாதார வசதிகளை பதிவு செய்தல் ஆகியவை இடம்பெற உள்ளன.

இறுதிக் கட்டமாக மின்னணு மருந்தகம் மற்றும் தொலைமருத்துவ சேவையை ஏற்படுத்துவதற்கான, ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை வகுக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைக்கப்படுவதோடு, மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளும், ஆவணங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவசேவையின் செயல்திறன், செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கணிசமாக மேம்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி எனும் இலக்கை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியும் துரிதமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments