தாமதிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு..!
கிழக்கு லடாக்கில் சீன படைகள் பின்வாங்கலை தாமதப்படுத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான, ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் அத்துமீறி குவிக்கப்பட்டுள்ள சீன படைகளை பின்வாங்க இந்தியா - சீனா இடையே, தூதரக மற்றும் ராணுவ மட்டத்தில் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இறுதியாக கடந்த மாதம் 14ம் தேதி நடைபெற்ற பேச்சுவர்த்தையில் பாங்கோங் த்சோ மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகள் பின்வாங்கப்படும் என சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை படைகளை திரும்பப்பெறுவதற்கான அறிகுறிகள் ஏதும் காணப்படவில்லை.
மாறாக இந்திய எல்லைக்குள் குளிர் காலத்தில் மீண்டும் ஊடுருவ சீனா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, பாங்காங் திசோ பகுதியில் பிங்கர் 5 மற்றும் பிங்கர் 6ல் குளிர்காலத்தை தாங்குவதற்கு ஏற்றவாறு சீனா ராணுவம் சிறப்பு கூடாரங்களை அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உணவுப் பொருட்கள் மற்றும் சிறப்பு உடைகளும் அங்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜுலை மாத இறுதியில் நடைபெற இருந்த இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிழக்கு லடாக்கின் எல்லைபகுதியில் தற்போது உள்ள துருப்புகளை, குளிர்காலம் முழுவதிலும் அங்கேயே வைத்திருக்க இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினருடன், விமானப்படை, டேங்கர்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருந்து, சூழலுக்கு ஏற்றவாறு தக்க பதிலடி அளிக்க இந்தியா தயாராகி வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments