லிபுலேக் அருகே சீனா 1000 வீரர்களை நிறுத்தியுள்ளதாகத் தகவல்
உத்தரக்கண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீன ராணுவம் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சீனப் படையினரின் எண்ணிக்கை அண்மையில் குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் உத்தரக்கண்ட் மாநிலத்தின் லிபுலேக் கணவாய்ப் பாதை அருகே சீனா ஆயிரம் வீரர்களை நிறுத்தியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கைலாச மானசரோவர் புனிதப் பயணம் செல்வதற்கும், இந்தியா - சீனா இடையே மலைவாழ் மக்கள் தங்கள் பொருட்களைப் பண்டமாற்று முறையில் பரிமாற்றிக் கொள்வதற்கும் வழியாக லிபுலேக் கணவாய் பயன்படுகிறது.
லிபுலேக் தங்களுடையது எனக் கூறி நேபாளம் புதிதாக வெளியிட்டுள்ள வரைபடத்தில் அதைச் சேர்த்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் லிபுலேக் அருகே சீனா படையினரைக் குவித்து வருவது எல்லையில் அதன் படைபலத்தைப் பெருக்கி வருவதையே காட்டுகிறது.
Comments