தீவிரவாதிகளை கையாள்வதில் சிறப்பு பயிற்சி ... கேரள தங்கக்கடத்தல் கும்பலை கதறவிடும் வந்தனா ஐ.பி.எஸ்!
கேரள மாநிலத்தில் தங்கக்கட்டத்தல் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனின் பெயரும் தங்கக்கடத்தல் விவகாரத்தில் அடிபடுகிறது. தங்கம் கடத்தியதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தங்கக்கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் முக்கிய அதிகாரியான கே.பி. வந்தனா ஐ.பி.எஸ். துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிவசங்கரன் திணறிப் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி திறமையான அதிகாரிகளை தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள விரும்புவார். என்.ஐ.ஏ தலைவர் அஜித் தோவல், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அதற்கு உதராணம். சமீபத்தில், தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதாவும் பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், தமிழகத்தில் அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கும் பிரதமர் மோடி முக்கிய பதவி கொடுத்துள்ளது பலருக்கும் தெரியாத விஷயம். அந்த அதிகாரிதான் வந்தனா ஐ.பி.எஸ். தமிழகத்தைச் சேர்ந்த இவர் தேசிய புலனாய்வு முகமையின் தென் மாநிலங்களுக்கான தலைவர் ஆவார்.
கடந்த 2004- ம் ஆண்டு பயிற்சியை முடித்த வந்தனா, ராஜஸ்தான் மாநில கேடர் அதிகாரியாக போலீஸ் துறையில் பணியை தொடங்கினார். அமெரிக்காவில் வடக்கு கரோலினாவிலுள்ள American Intelligence Training Academy - யில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்துவதிலும் சிறப்பு பயிற்சி முடித்தவர். கடினமாக இந்த பயிற்சியை நிறைவு செய்த ஒரு சில பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளில் இவரும் ஒருவர். தற்போது, என்.ஐ.ஏ அமைப்பில் டி.ஐ.ஜி- யாக இருக்கும் வந்தனா தலைமையிலான அதிகாரிகள்தான் கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தை விசாரித்து வருகின்றனர். வந்தனா ஐ.பி.எஸ் சென்னை விமான நிலையத்திலும் குடியுரிமை பிரிவில் பணியாற்றியுள்ளார்,
ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பில் இருந்தாக குற்றச்சாட்டுக்குள்ளான சிவசங்கரையும் இவர்தான் விசாரித்து வருகிறார். விசாரணையில் வந்தனா கேட்கும் நுணுக்கமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிவசங்கரன் பரிதாபமாக விழித்தாக சொல்லப்படுகிறது. கேரளாவுக்கு தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் சிரியாவின் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வந்தனா ஐ.பி.எஸ் தலைமையிலான என்.ஐ.ஏ விசாரணைக்குழு நேற்று சென்னை வந்ததும் விசாரணை மேற்கொண்டது.
Comments