ATM - ல் கைவரிசை... தீயில் கருகிய இரண்டரை லட்சம் ரூபாய்.. சிக்கிய வட மாநில கொள்ளைக் கும்பல்

0 27455
நாமக்கல் அருகே, கியாஸ் வெல்டரைப் பயன்படுத்தி ஏ.டி.எம் எந்திரத்தை துண்டாகப் பிளந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, ஏடிஎம் எந்திரம் வெடித்து உள்ளே இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் தீயில் கருகியது.

நாமக்கல் அருகே, கியாஸ் வெல்டரைப் பயன்படுத்தி ஏ.டி.எம் எந்திரத்தை துண்டாகப் பிளந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது, ஏடிஎம் எந்திரம் வெடித்து உள்ளே இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் தீயில் கருகியது. லாரிகளில் வந்து தமிழகத்தில் கைவரிசை காட்டிய வட மாநில கொள்ளைக் கும்பல் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தனியார் கல்வி நிறுவனம் நுழைவாயிலில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் இயந்திரம் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.

மர்ம நபர்கள் வெல்டிங் மெஷினைப் பயன்படுத்தி ஏடிஎம் எந்திரத்தை இரண்டாகப் பிளக்க முயன்றபோது, இயந்திரத்தில் தீப்பிடித்து உள்ளே இருந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் தீயில் கருகியது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாச்சல் பிரிவு அருகே பேரிகார்டு வைத்து குற்றத்தடுப்பு நோக்கில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சேலத்தில் இருந்து நாமக்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்த வெளி மாநில டாரஸ் லாரியை நிறுத்தியபோது, சாலையின் ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் உட்பட 3 பேர் கீழே இறங்கி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலீசிடம் சிக்கிய மூவரும் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சைகுல், முகமது சராபத், முகமது ஜினீத் என்பது தெரியவந்தது. சரக்கு ஏற்றிச்செல்ல ஒவ்வொருமுறை வந்து செல்லும் போதும், வழியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத ஏ.டி.எம்-களைக் குறி வைத்து கைவரிசை காட்டி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று மதுரைக்கு வந்து விட்டு ஆந்திரா செல்லும் வழியில் பாதுகாப்பில்லா இந்த ஏ.டி.எம் மையம் அவர்களின் கண்ணில் பட்டுள்ளது. இதற்காகவே தாங்கள் லாரியில் கொண்டுவந்திருந்த கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டு வைத்து உடைத்துள்ளனர்.

அப்போது திடீரென தீப்பற்றியதால் பயந்துபோன மூவரும், வெல்டிங் மெஷினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக தப்பிச்சென்றுவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த மூன்று கொள்ளையர்களும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments