வழிபாட்டுத்தலங்களுக்கு தளர்வுகள்.. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்..!
ஊராட்சிப் பகுதிகளைத் தொடர்ந்து, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் சிறிய வழிபாட்டுத் தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயமாகும்.
ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரியவழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.
இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை, தற்போதுள்ள நிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும்போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும், சென்னை எனில் மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெறவேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திரதினவிழா கொண்டாடப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
Comments