7,000 கி.மீ. தூர வான் பயணம்... அம்பாலா வந்தன ரபேல் விமானங்கள்
பிரான்சால் ஒப்படைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள், சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூர வான் பயணத்துக்கு பிறகு இந்தியாவின் ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தை இன்று மதியம் வந்தடைந்தன.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இதில் முதல்கட்டமாக அளிக்கப்பட்ட 5 போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் மெரிக்நாக் (Merignac)விமானப்படை தளத்தில் இருந்து நேற்று முன்தினம் இந்தியா நோக்கி புறப்பட்டன.
காஷ்மீரை சேர்ந்த விமானப்படை கமோடர் ஹிலால் அகமது ராதர் (Air Commodore Hilal Ahmad Rather) முதல் நபராக விமானத்தை செலுத்தினார். பின்னர் புறப்பட்ட 5 விமானங்களிலும் இடையில் நடுவானில் இஸ்ரேல், கிரீஸ் வான் பரப்பில் பறந்தபோது 30 ஆயிரம் அடி உயரத்தில் பிரான்ஸ் விமானப்படை டேங்கர் விமானத்தின் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா (Al Dhafra) பகுதியிலுள்ள பிரான்ஸ் விமான படை தளத்தில் 5 விமானங்களும் தரையிறக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட 5 விமானங்களும், ஹரியானா மாநிலம் அம்பாலாவிலுள்ள இந்திய விமான படைதளத்தை மதியம் 2 மணியளவில் 2 சுகோய் விமானங்கள் புடைசூழ இன்று மதியம் வந்தடைந்தன. அம்பாலா விமானபடைதளத்தில் 5 விமானங்களுக்கும் தண்ணீரை பீய்ச்சி அடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
5 விமானங்களும் அம்பாலா விமான படைதளத்திலுள்ள கோல்டன் அரோஸ் விமானப்படைபிரிவில் விரைவில் சேர்க்கப்படவுள்ளது. இதையடுத்து வேறு படைதளத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளது. விமானங்கள் வந்தது குறித்த தகவலை ட்விட்டரில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருந்தார்.
Comments