ஐராவத காட்சிக்காக.. யானைக்கே விபூதி அடித்த பாகன்ஸ்..! செந்தூரில் பக்தி பரவசம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சிவபெருமான் ஐராவதக் காட்சி பூஜைக்காக அங்குள்ள யானை முதன்முறையாக கோவிலுக்குள் வலம் வந்தது. உடல் முழுவதும் கிலோக்கணக்கில் விபூதி மற்றும் அரிசிமாவு கலந்து பூசப்பட்டதால் வெள்ளை யானையாகக் காட்சி தந்தது.
கொரோனா ஊரடங்கால் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் ஆடி மாதம் ஸ்வாதி நட்சத்திரத்தன்று 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கயிலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் என்கிற வெள்ளை யானைமீது அமர்ந்து காட்சி கொடுத்ததாக ஐதீக நிகழ்ச்சி திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்தது.
ஆண்டுதோறும் உடல் முழுவதும் திருநீறு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை கலந்து பூசப்பட்ட வெள்ளை யானை முன் செல்ல, சுந்தரமூர்த்தி நாயனார் பல்லக்கில் எழுந்தருளும் வீதி உலா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ரதவீதியில் சுவாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக வெள்ளை யானை முன் செல்ல கோவிலின் உள்ளே இரண்டாவது பிரகாரமான ஐராவத மண்டபத்தில் சுவாமி சுந்தரமூர்த்தி நாயனார் சிறிய பல்லக்கிலும், சுவாமி சேரமான்பெருமான் சிறிய கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளும் பல்லக்கு உலா நடைபெற்றது.
கோவிலுக்குள் செல்வதற்கு முன்பாக யானை அழகாக மண்டியிட்டு வணங்கி உள்ளே சென்றது
இந்நிகழ்ச்சி கோயில் உள்பிரகாரத்தில் நடந்ததால் கோயில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்காக யானையின் உடலில் பூசுவதற்கு 10 கிலோ திருநீறு 6 கிலோ அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகன்கள் பயன்படுத்தியதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
21 வயதான தெய்வானை என்ற யானை வெள்ளை யானையாக மாற்றப்பட்டு கோவிலுக்குள் அழைத்து செல்லப்பட்டது இதுவே முதன்முறை....
ஐராவத காட்சிக்காக.. யானைக்கே விபூதி அடித்த பாகன்ஸ்..! செந்தூரில் பக்தி பரவசம் #Thiruchendur | #Elephant https://t.co/cilYnr98pp
— Polimer News (@polimernews) July 29, 2020
Comments