ஆறாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கத் திட்டம்
ஆறாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்குதல், அதற்கு பிறகும் விருப்பப் பாடமாக தாய்மொழிக் கல்வியைப் படித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து, கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு, மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019யை கடந்தாண்டு வெளியிட்டது.
இந்த கல்விக் கொள்கை வரைவைத் தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில், இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாம் மொழியாக இந்தி கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்தி மொழியை கட்டாயம் என்பதை நீக்கி விரும்பினால் பயிற்றுவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதைதொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து சுமார் 2 லட்சம் பேர் இந்த வரைவு தொடர்பாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதனையேற்று புதிய கல்விக்கொள்கை வரைவில் மத்திய அரசு பல்வேறு அம்சங்களில் மாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஆறாம் வகுப்பு வரையில் பள்ளி மாணாக்கர்களுக்கு தாய் மொழிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8ம் வகுப்பு அல்லது அதற்குப் பிறகும்கூட மாணாக்கர்கள் விரும்பினால் தாய்மொழியில் படிக்க இந்த வரைவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வரைவு மூலம், கல்வித்துறையில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 சதவித முதலீட்டை அதிகரித்து, பள்ளிக் கல்வியில் 100 சதவீதம் அளவிற்கும், உயர்கல்வித்துறையில் 50 சதவீதம் அளவிற்கும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், சர்வதேச பல்கலைக்கழகங்கள் இந்தியாவிலும் கல்வி நிலையங்களைத் திறக்க வழிவகை செய்யும். மேலும், மாவட்ட அளவில் சிறுவர்களின் கலை மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த திறன்களை ஊக்குவிக்கும் விதமான பள்ளிகளை தொடங்குவது போன்ற பல்வேறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் இந்த வரைவு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு முதலே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Comments