வலுப்பெறும் இந்திய விமானப்படை.. ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை..!
பிரான்சு நாட்டில் இருந்து பெறப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட 5 ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைகின்றன.
இந்திய விமானப்படையை வலுப்படுத்தும் விதமாக பிரான்சு நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதற்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வந்து சேர்கின்றன.
பிரான்சில் இருந்து கடந்த திங்களன்று புறப்பட்ட விமானங்கள் சர்வதேச சட்ட விதிமுறைகள் காரணமாக நேரடியாக இந்தியா வராமல், ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்தாப்ரா விமானப்படை தளத்தில் தரையிறங்கி உள்ளன. சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டார் தூரம் பயணம் காரணமாக இடையில் ஆகாயத்திலேயே ஒருமுறை விமானங்களில் எரிபொருள் நிரப்பப்பட்டது.
அதைதொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ரபேல் விமானங்கள் புறப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் வான்வெளிப்பாதையை தவிப்பதற்காக குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரை வந்தடைகின்றன.
பிறகு, அங்கிருந்து பிற்பகல் 2 மணியளவில் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்திற்கு விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை குறிப்பிட்ட சமயத்தில் அப்பகுதியில் வானிலை மோசமடைந்தால், விமானங்களை ஜோத்பூர் விமானப்படை தளத்தில் தரையிறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ரபேல் விமானங்களின் வருகையை முன்னிட்டு அம்பாலா விமானப்படை தளத்தை சுற்றியுள்ள நான்கு கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீடுகளின் மாடியில் மக்கள் கூடுவதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் வரும் நேரத்தில் எந்த ட்ரோன்களும் பறக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments