ஷாம் வீட்டில் சூதாட்ட கிளப் ? சிக்கப்போகும் நடிகர், நடிகைகள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் வீட்டில் நடத்தப்பட்ட சூதாட்டம் தொடர்பாக நடிகர் ஷாம் உள்ளிட்ட 13 பேரை கைது செய்த போலீசார், காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.
நடிகர் ஷாம் வீட்டில் இரவு நேரத்தில் நடக்கும் சூதாட்டத்தில் திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லேசா லேசா, 12 பி, உள்ளம் கேட்குமே மற்றும் இயற்கை உள்ளிட்ட வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஷாம். இயற்கை படத்தில் வரும் "சீட்டு கட்டு சீட்டு நம்ம வாழ்க்கைடா" என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகர் ஷாம், தனது வீட்டிலேயே திரை நட்சத்திரங்கள் சிலருடன் சூதாட்டம் போட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஓஎம்ஆரில் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகர் ஷாம், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள வீட்டில் தான் சூதாட்டம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் அந்த வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதில் சூதாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நடிகர் ஷாம் உட்பட 13 பேரை கையும், களவுமாக பிடித்த போலீசார் சீட்டு கட்டுகள், டோக்கன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
லட்சக்கணக்கில் பணத்தை வைத்து சூதாட்டம் நடந்ததாகவும், நேரடியாக பணத்தை வைக்காமல் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கும் ஒரு தொகை என மதிப்பு வைத்தும் சூதாட்டம் ஆடி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இரவு 11 மணி முதல் விடிய விடிய நடக்கும் சூதாட்டத்தில் விடிந்ததும் வெற்றி பெற்றவருக்கு கூகுள் பே பரிவர்த்தனை மூலம் பணத்தை அனுப்பி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இதுபோன்ற டோக்கன்களை கைப்பற்றியுள்ள போலீசார் அதற்கான பண மதிப்பு எவ்வளவு என விசாரிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநகர சூதாட்ட தடுப்புச் சட்டம் 45 & 46 - என்கிற பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ள நுங்கம்பாக்கம் போலீசார், ஷாம் வீட்டில் தினமும் நடந்ததாக கூறப்படும் சூதாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் யார் யார் என விசாரித்து வருகின்றனர். இதற்காக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனிடையே, சம்மந்தப்பட்ட வீட்டில் 15 வயது சிறுமியை பணிப்பெண்ணாக வைத்திருந்ததாகவும் நடிகர் ஷாம் மீது மற்றொரு புகார் எழுந்துள்ளது. ஒரு பக்கம் இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு நாட்களில் தொற்று நோய் பரவும் சூழலில், நடிகர் வீட்டில் நடந்த சூதாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தொற்று நோய் பரவல் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியாதது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.
Comments