த்ரீ ரோசஸ் சொப்னாவும் சிக்கிய மாப்பிள்ளைகளும்..! ஐ.பி.எஸ் என திருமண மோசடி

0 9797

பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்று கூறி 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக பெண் ஒருவர், திருப்பதி காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். 3 மாதத்திற்கு ஒருவர் என 3 கணவரை மாற்றிய த்ரீ ரோசஸ் பெண் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருப்பதியை சேர்ந்த சொப்னா என்பவர் தன்னை ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என கூறி மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக மாப்பிள்ளை தேடியுள்ளார். இதில் சொப்னாவை பார்த்து சொக்கிப்போன பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த ராம ஆஞ்சநேயலு என்ற டென்மார்க் மாப்பிள்ளை அவரை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ராமஆஞ்சநேயலு - சொப்னா தம்பதியர் இருவரும் ஹைதராபாத்தில் வாழ்ந்துவந்த நிலையில், மூன்று மாதங்கள் கழித்து, தான் பணிபுரியும் டென்மார்க் புறப்பட்ட ராமஆஞ்சநேயலு மனைவியையும் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார், அதனை மறுத்த மனைவி சொப்னா தான் இங்கேயே இருப்பதாக கூறி சமாளித்துள்ளார்.

ராமஆஞ்சநேயலு வெளிநாட்டிற்கு புறப்பட்டு சென்றதும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ராமஆஞ்சநேயலுவின் பெற்றோரின் வீட்டிற்கு சென்ற சொப்னா, ராம ஆஞ்ச நேயலு தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டதாக கூறி பெற்றோரிடம் 30 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

பணத்திலேயே குறியாக இருந்த சொப்னாவின் நடவடிக்கையை கண்டு சந்தேகம் அடைந்த டென்மார்க மாப்பிள்ளையின் பெற்றோர் டோணகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஐ.பி.எஸ் அதிகாரி என கூறிய சொப்னாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது .

ஐ.பி.எஸ் அதிகாரி என ஏமாற்றி ஏற்கனவே இரண்டு திருமணம் செய்துகொண்டு மாப்பிள்ளை வீட்டாரிடம் மிரட்டி பணம் பறித்ததும், பதங்கி சொப்னா, பதங்கி ஹரினி, நந்தமுரி சொப்னா ஆகிய பெயர்களில் 3 மாப்பிள்ளைகளை திருமணம் செய்து மோசடி வேப்பில்லை அடித்தவர் இந்த சொப்னா என்பது அம்பலமானது.

முதலில் சித்தூரை சேர்ந்த பிரித்விராஜ் என்பவரையும் 3 மாதத்தில் அவரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு கழற்றிவிட்டுள்ளார். பிரித்திவிராஜ் அளித்த புகாரின் பேரில் சொப்னா மீது திருப்பதி குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் 2வதாக ஆத்ம கூரைசேர்ந்த சுதாகர் என்பவரை மேட்ரி மோனியல் இணையதளம் மூலம் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு அவரது குடும்பத்தினரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இப்படி அடுத்தடுத்து பெயரை மாற்றி 3 ஆண்களின் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய சொப்னாவின் திருமண வாழ்க்கையில் 3 வதாக சிக்கிய டென்மார்க் மாப்பிள்ளை வைத்த திடீர் டுவிஸ்ட்டால் விடை தெரியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

சொப்னா மீது மோசடி வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தான் தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளதாக சொப்னா கூறியுள்ளார். ஆனால் டென்மார்க் மாப்பிள்ளை ராம் ஆஞ்சநேயலுவோ சொப்னாவின் கர்ப்பத்திற்கு தான் காரணமில்லை என்றும் திருமணமான நாள் முதல் சொப்னா தன்னுடன் தாம்பத்யத்தில் ஈடுபடவில்லை என்றும் கைவிரித்து விட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து மோசடி வழக்கில் சிக்கிய திரீ ரோசஸ் சொப்னாவை காப்பகத்தில் சேர்த்த காவல்துறையினர் உண்மையிலேயே அவர் கர்ப்பமாக உள்ளாரா ? அப்படியென்றால் அவரது கர்ப்பத்திற்கு யார் காரணம் ? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே ராம ஆஞ்சநேயலுவின் பெற்றோர், மோசடிப்பெண் சொப்னாவிடம் இருந்து தங்களை காப்பாற்றுங்கள் என்று காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாப்பிள்ளை மற்றும் பெண் தேடுவோர் திருமண இணையதளங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களை உண்மை என அப்படியே நம்பிவிடாமல், ஒன்றுக்கு 3 முறை நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவித்த தகவல்கள் உண்மையா ? என்பதை அறிந்து கொண்ட பின் திருமண பேச்சுவார்த்தையை தொடங்குவதே சாலச்சிறந்தது.

இல்லையேல் இது போன்ற கல்யாண மோசடி நபர்களிடம் சிக்கி உங்கள் வீட்டு பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிய நேரிடும் என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments