இந்தியா நோக்கி புறப்பட்டன ரஃபேல் போர் விமானங்கள் ; புதன்கிழமை அம்பாலா வந்தடையும்!

0 15772

இந்தியாவின் விமானப்படை பலத்தை அதிகரிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் பேட்ஜ் 5 ரஃபேல் ரக போர் விமானங்கள் பிரான்ஸின் இஸ்ட்ரெஸ் தளத்திலிருந்து இன்று இந்தியாவுக்கு புறப்பட்டன. இந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானிகளே இந்தியா நோக்கி ஓட்டி வருகின்றனர். இந்தியா வரும் வழியில் அமீரகத்தில் அல்தர்ஸா விமானப்படை தளத்தில் ஓய்வு எடுத்து  விட்டு மீண்டும் இந்தியா நோக்கிஅவை புறப்படுகின்றன. கிட்டத்தட்ட 7, 364 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து 29- ந் தேதி அம்பாலா விமாப்படைத் தளத்தில் தரையிறங்குகின்றன. 

முதல் பேட்ஜ் ரஃபேல் விமானங்கள் அம்பாலாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும். முன்னதாக, ரஃபேல் போர் விமானங்களை ஓட்ட பிரான்ஸில் இந்திய விமானப்படையின் 12 விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இவர்கள்தான் ரஃபேல் விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர்.image

முன்னதாக, இந்திய விமானப்படை விமானிகளை பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷரப் சந்தித்து பேசினார். இந்திய விமானப்படை வீரர்களின் பாதுகாப்பான பயணத்துக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார். இந்திய விமானப்படை வீரர்களுடன் பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதர் உரையாற்றும் புகைப்படத்தை பிரான்ஸ் விமானப்படை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது . தற்போது, இந்தியா வரும் ரஃபேல் விமானங்கள் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்தியா ரூ. 58, 000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்களை வாங்க பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதில், 30 போர் விமானங்கள் , 6 பயிற்சி விமானங்கள் ஆகும். பயிற்சி விமானங்கள் இரட்டை இருக்கைகள் கொண்டவை. இரண்டாவது பேட்ஜ் ரஃபேல் விமானங்கள் மேற்கு வங்கத்திலுள்ள ஹாசிமாரா விமானப்படை தளத்தில் இணைக்ப்படும். இதற்காக, இந்த விமானப்படை மையத்தில் ரூ. 400 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரும் 2021- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 36 விமானங்கள் இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக திட்டமிட்ட காலத்துக்குள் ரஃபேல் போர் விமானங்களை ஒப்படைப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ரஃபேல் போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments