ரூ.40 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை !
சென்னையில் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாயை நெருங்கி விற்பனையாகி வருகிறது.
சமீப காலங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. ஊரடங்கால் தங்க நகை விற்பனை முடங்கியிருந்தாலும், பங்குச்சந்தைகளில் நிலவிய ஸ்திரமற்ற சூழலால் முதலீட்டாளர்களும் தங்கத்தை நாடத் தொடங்கினர்.
தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்ததன் எதிரொலியாக, தங்கம் விலை கிடுகிடுவென உயரத்துவங்கியது. ஏற்கனவே தங்கம் ஒரு சவரன் 37 ஆயிரம், 38 ஆயிரம், 39 ஆயிரம் என மிகக் குறுகிய இடைவெளிகளில் அடுத்தடுத்த உச்சங்களை தொட்டு விற்பனையானது. இந்நிலையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத வகையில் 40 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாகி வருகிறது.
நேற்று 4,904 ரூபாயாக இருந்த ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று ஒரே நாளில் 74 ரூபாய் அதிகரித்து 4,978 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் நேற்று 39,232 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று ஒரே நாளில் 592 ரூபாய் உயர்ந்து 39,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் பார்வெள்ளி ஒரு கிலோ இன்று ஒரே நாளில் 3,900 ரூபாய் உயர்ந்து 70,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையின் கிடு கிடு உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
Comments