சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க புதிய திட்டம் விரைவில் நடைமுறை - சென்னை மாநகர காவல் ஆணையர்
சைபர் கிரைம் குற்றங்களை தடுக்கவும், சமூக வலைதளங்களை கண்காணிக்கவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளதாக மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
முழு ஊரடங்கையொட்டி சென்ட்ரல் பகுதியில் வாகன தணிக்கையை ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சமீப காலமாக சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், இது தவிர்க்கப்பட வேண்டுமென்றும், அதை நல்ல விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். சமூக வலைதளத்தில் போலி கணக்கை உருவாக்கி, பொய் செய்திகளை பரப்பக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
சென்னையில் 144 தடையை மீறியதாக 1.18 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விதிகளை மீறியதாக 1.57 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல் விற்போர் மற்றும் வாங்குவோர் கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
Comments